நீண்ட நாட்களுக்கு பிறகு நிரலாக்கம்…
Written on May 2, 2011 at 7:04 am, by ஆமாச்சு
கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வாரப்பத்திரிக்கைக்கான வாசகர் பராமரிப்பு மென்பொருளை வடிவமைத்துக் கொடுக்கவிருக்கிறேன். எனது பணிகளோடு தொடர்புடைய தளங்கள் வடிவமைப்புத் தவிர பெரிதாக கடந்த ஆண்டுகளில் தொழில்நுட்ப வேலைகளை மேற்கொண்டது கிடையாது. மொழிபெயர்ப்பு ஆவணமாக்கம் பரவலாக்கத்திற்கே பெரும்பாலான நேரம் ஒதுக்கி வந்திருக்கிறேன்.
நிரலாக்கத்தை பயனுள்ள பொழுதுபோக்காய் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாளைய எண்ணம். அது ஈடேறி வருவது போல் தெரிகிறது. ஆயினும் நான் வடிவமைத்த இப்பயன்பாடு தொழில் ரீதியானது.
கூடித் தோற்றுவித்த அமைப்பில் நிரலாக்கம் எமது முதன்மை பொறுப்பல்ல. ஆயினும் இன்றைய சூழலுக்காக சற்றே வளைந்து கொடுக்கிறேன். தொழில் எடுத்து வருவது நிர்வாகம் ஆகியவயே எமது முதற்பொறுப்பு. நிரலாக்கம் பயனுள்ள பொழுதுபோக்காய் வருங்காலங்களில் அமைய வேண்டும். அதுவே விருப்பம்.
தொடர்ந்து வானூர்தி தொடர்பான ஒரு பயன்பாட்டையும் செய்யவிருக்கிறேன். இது போஸ்டுகிரெஸ், பைதான், டிஜாங்கோ தொழில்நுட்பங்களை ஆதாரமாய்க் கொண்டவை.
டிவிட்டர், பேஸ்புக், கூகுள் பஸ், லிங்க்ட்இன் இடுகைகள் இனியில்லை
Written on April 24, 2011 at 8:47 pm, by ஆமாச்சு
தனியுரிம் சமூகப் பிணைப்பு (Social Networking) சேவைகளை கடந்த பல மாதங்களாக பயன்படுத்திவந்தேன். அவற்றை இனி பயன்படுத்தாது தவிர்ப்பேன்.
சுற்றத்திலிருக்கும் சிலருக்காக ஏற்பட்ட வழக்கம். கட்டற்ற மாற்று சேவைகளான identi.ca, joindiaspora.com ஆகியவற்றுள் amachu என்ற அடையாளத்துடன் இருக்கிறேன். அங்கே சந்திக்கலாம்.
மேற்கண்ட தனியுரிம சேவைகளில் தொடங்கப்பட்ட கணக்குகள் அழிக்கப்படவில்லை.
யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை
Written on December 20, 2009 at 10:08 pm, by ஆமாச்சு
உபுண்டு தமிழ்க் குழுமம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் வாயிலாக கட்டற்ற மென்பொருளை பரப்ப நாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாய் திரட்டப்பட்ட சிறு நிதியினைக் கொண்டு கட்டற்ற மென்பொருளுக்கான அறக்கட்டளையொன்றை கடந்த பதினோறாம் தேதி பதிவு செய்திருக்கிறோம். கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை தமிழகத்தில் தழைக்கச் செய்ய முன்னர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவை மீண்டும் துளிர் விட்டால் அதனோடு இணைந்து பணியாற்ற விழைகிறோம். ஆயினும் இது இயல்பால் தமிழகத்தில் தோன்றிய ஓர் அறக்கட்டளைக்குரிய குணங்களோடு திகழும்.
அறக்கட்டளையின் நோக்கங்களாவன:
- பகிர்ந்தும் எப்பொருட்டும் பயன்படுத்தத் தக்கதாக, படைக்கப்படும் மென்பொருள்களைக் கிடைக்கச் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்.
- அத்தகைய மென்பொருள்களின் உருவாக்கத்திற்கும் பயன்பாட்டுப் பெருக்கத்திற்குமான செயல்களில் ஈடுபடுதல்.
உபுண்டு தமிழ்க் குழுமத்தின் காரணமாக எமக்கு அறிமுகமாகி இன்று இவ் அறக்கட்டளையை நிறுவுவதில் துணையிருப்போர் உதகை பத்மனாதனும் தங்கமணி அருணும் ஆவர். பதிவு செய்த நாளன்று தற்சமயம் NRCFOSS இல் பணியாற்றும் சுஜியும் மாலதியும் உடனிருந்தனர்.
அறக்கட்டளை நிறுவப்பட்டதற்கான அத்தாட்சி சான்று இன்னும் பெறப்படவில்லை. பெற்றதும் அறக்கட்டளைக்கான வங்கிக் கணக்கு உள்ளிட்ட பிற பணிகள் மேற்கொள்ளப்படும். அறக்கட்டளையின் முதற்கட்ட பணிகளாக சில மென்பொருள்களை உருவாக்கும் திட்டம் உள்ளது. அறக்கட்டளையின் இணைய தளமாக http://yavarkkum.org திகழும். இன்னும் முழுமையாக உருப்பெறவில்லை. போன வருஷமே பதிஞ்ச தளம். ரூபி ஆன் ரெயில்ஸ் மூலம் உருவாக்கத் திட்டம். மடலாடற் குழு போன்ற கட்டற்ற மென்பொருள் சமூகத்திற்கே உரிய விஷயங்களுக்கும் இன்னும் கொஞ்சம் நாள் பிடிக்கும்.
கடந்த காலங்களில் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் மூலமாக நாங்கள் மேற்கொண்ட பணிகளுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். உபுண்டு தமிழ்க் குழுமப் பணிகளுக்கு இவ் அறக்கட்டளை வருங்காலங்களில் பங்களிக்க கடமைப் பட்டுள்ளது. அதே போல் உபுண்டு தமிழ்க் குழமத்தின் பணிகளால் வருங்காலங்களில் ஏதேனும் நிதி திரட்டப்பட்டால் அவை இவ் அறக்கட்டளைக்கே போய்ச் சேருதல் நல்லது. விதிவிலக்கான காரணங்கள் எழலாம். இப்போதைக்கு இரண்டில் இருக்கும் அங்கத்தினரும் ஒன்றே. நாளை இப்படித்தான் தொடரும் என்று சொல்ல முடியாது. பார்க்கலாம்!
உபுண்டு தமிழ்க் குழுமத்தோடு நின்றுவிடாது மற்ற கட்டற்ற மென்பொருள் சார்ந்த பணிகளுக்கும் இவ் அறக்கட்டளையின் பணி இப்பொழுதிலிருந்தே விரியும்.